நீட் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்ய பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
1 min read
MK Stalin’s request to the Prime Minister to reconsider the NEET decision
16.7.2021
பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம் என்பதால் இம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மோடி ஆலோசனை
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூலை 16) காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:-
கடினமான பணி
கொரோனா பெருந்தொற்றை சமாளிக்கும் கடினமான பணியை, புதிதாக பொறுப்பேற்ற ஓர் அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
தடுப்பூசியின் தேவை
தமிழகத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். தடுப்பூசிகள் வீணடிக்கப்படுவதை, தமிழக அரசு 6 சதவீதத்தில் இருந்து முழுமையாக தவிர்த்துள்ளதுடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் பெரிய அளவில் வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்போது தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.
எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், எங்கள் மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க கோரியிருக்கிறேன். இந்த முக்கியமான பிரச்னையில், நான் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.
சேவை வரி
தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, கொரோனா தொடர்பான அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டிருந்தேன். அதனை கனிவுடன் பரிசீலிக்கவும். 3ம் அலை வரும் எனக் கூறப்படுகிற நிலையில், அதனைச் சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கு மேலும் பல உதவிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
நீட் தேர்வு
பள்ளி – கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே பிரதமர் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இப்பெருந்தொற்றை கையாள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என உறுதியளிக்கிறேன். இதில் இருந்து மீள, ஒன்றிய அரசுடனும் அனைத்து மாநிலங்களோடும் நாங்கள் துணை நிற்போம்.
இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.