ஒரு குழந்தையை காப்பாற்ற 30 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர்; 3 பேர் பலி
1 min read
Thirty people fell into the well to save a baby; 3 killed
16.7.2021
மத்திய பிரதேசத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக மக்கள் திரண்டு வந்ததால் சுவர் இடிந்து 30 பேர் கிணற்றில் விழுந்தனர். இதில் 3 பேர் இறந்தனர்.
கிணற்றில் விழுந்த குழந்தை
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்துள்ளனர்.
அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை ஒட்டி நின்று கொண்டிருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
3 பேர் சாவு
உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்ததும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கிணற்றில் இருந்து காயமடைந்த நிலையில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சவுகான், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.