திருமண வீட்டில் ஆடிப்பாடிய இளைஞர் சுட்டுக் கொலை; பக்கத்துவீட்டுக்காரர் ஆத்திரம்
1 min read
Young man shot dead at wedding home; Neighbor rage
16.7.2021
உத்தர பிரதேசத்தில் இரவில் ஆடிப்பாடி பிறரின் தூக்கத்தை கெடுத்த இளைஞரை பக்கத்து வீட்டுக்காரர் சுட்டுக் கொன்றனர்.
திருமண வீடு
உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சுமித் காஷ்யப் (வயது 18). இவருடைய மாமாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முந்தின நாள் இரவில், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, சுமித் ஆடிப்பாடினார்.
இந்த பாட்டு சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுரேந்திர சிங் என்பவர், இதனால் கோபம் அடைந்துள்ளார்.
அவர் தூக்கம் கலைந்து, எழுந்து வெளியே வந்துள்ளார். ஏன் இவ்வளவு சத்தம்? என்று கேட்டு கொண்டே வந்தவர் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி பலமுறை சுட்டுள்ளார்.
சுட்டுக்கொலை
அதன் பிறகும் பாட்டு சத்தம் நிற்காததால், கோபமடைந்த அவர், சுமித் காஷ்யப் மற்றும் இளைஞர் ஒருவரை குறிபார்த்து சுட்டுள்ளார்.
இதில் சுமித் நெற்றியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை எதிர்பார்க்காத அவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் காஷ்யப் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த அங்குர் என்ற மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து திருமண வீடு, துக்க வீடாக மாறியது. திருமண நிகழ்ச்சிகள் நின்று விட்டன.
மணமகன் தன்னுடைய 2 உறவினர்களுடன் மணமகளின் கிராமத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார். சுரேந்திராவை போலீசார் கைப்பற்றி, துப்பாக்கியையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.