மத்திய அரசின் நலத்திட்ட தகவல்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்; எல்.முருகன் அறிவுறுத்தல்
1 min read
The welfare information of the Central Government should reach the shopkeepers; L. Murugan Instruction
17/7/2021
மத்திய அரசின் நலத்திட்ட தகவல்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடகப் பிரிவு மத்திய இணை மந்திரி எல்.முருகன் அறிவுறுத்தினார்.
எல்.முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட எல்.முருகன் நேற்று முதல் முறையாக சென்னை வந்தார். அவரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயரதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அவர்களிடம் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-
மத்திய அரசின் முயற்சிகள்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள், சமூக ஊடகங்களில் அதிநவீன தொழில்நுட்பமான வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றை பயன்படுத்தி, மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 5 கிலோ இலவச அரிசி, கோதுமை திட்டத்தின் பயன்கள் குறித்த செய்தியை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.
நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அகில இந்திய வானொலியும், பொதிகை தொலைக்காட்சியும் தங்களது செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்திட வேண்டும்.
விவசாயிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறையால் பயனடைந்தோரின் அனுபவங்கள் குறித்த தகவல்களையும் மத்திய அரசின் மின்னணு ஊடகங்கள் வெளியிட வேண்டும்.
இதேபோல், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் புத்தக வெளியீட்டுப் பிரிவு, தமிழ்நாட்டின் வரலாறு, பாரம்பரியம், மொழியின் தொன்மை குறித்த புத்தகங்களை அதிக அளவில் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, மத்திய இணை மந்திரி எல்.முருகன், செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பல்வேறு ஊடகப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா.அண்ணாதுரை, இயக்குநர் குருபாபு பலராமன், மண்டல மக்கள்தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் காமராஜ், அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சியின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.