40 நகரங்களை இணைக்கும் வகையில் 10 வந்தே பாரத் ரெயில்கள்
1 min read
10 Vande Bharat trains connecting 40 cities
18.7.2021
40 நகரங்களை இணைக்கும் வகையில், 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில்
இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையான வந்தே பாரத்தில் 16 குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. 1,128 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 160 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் தானியங்கி கதவு, ஜிபிஎஸ் வசதி, ஹாட்ஸ்பாட் வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
வந்தே பாரத்
இந்த நிலையில், வரும் 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் 40 நகரங்களை இணைக்கும் வகையில் 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. ரெயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ள அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் ரெயில் சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் கூடுதலாக 10 வந்தே பாரத் ரெயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்காக, 44 வந்தே பாரத் ரெயில்களுக்கு, மின்னணு சாதனங்களை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஐதராபாத்தை சேர்ந்த மேத்தா நிறுவனம், அந்த சாதனங்களை உடனடியாக உற்பத்தியை தொடங்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
அவசர ஆலோசனை
இது தொடர்பாக நேற்று, ரெயில்வே வாரியம் அவசர ஆலோசனை நடத்தியது. இதில் ரெயில்வே வாரிய உறுப்பினர்கள், உற்பத்தி பிரிவின் பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ரெயில்களை இயக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள 3 உற்பத்தி பிரிவுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், மாதத்திற்கு 6 அல்லது 7 வந்தே பாரத் ரெயில்களை உற்பத்தி செய்ய முடியும் என ரெயில்வே கணக்கிட்டு உள்ளது.