நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: எச்.ராஜா முன்ஜாமின் தள்ளுபடி
1 min read
Case of slandering the court: H. Raja Munjam’s dismissal
19/7/2021
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பாரதீய ஜனதாவின் எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
எச்.ராஜா
கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய பாரதீய ஜனதாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்தார். அந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், எச்.ராஜா தாக்கல் செய்த மனுவில், ‛உயர் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமர்சனம் செய்ததற்காக உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் வழங்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தார்.
தள்ளுபடி
இந்நிலையில், எச்.ராஜா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. மேலும் இவ்வழக்கில் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.