பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்வு; பாராளுமன்றத்தில் தகவல்
1 min read
Excise duty on petrol, diesel hiked to Rs 3.35 lakh crore; Information in Parliament
19.7.2021
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த ஓராண்டில் 88 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.3.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று மக்களவையில் மந்திரி கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய பெட்ரோலியத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி இன்று பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி கடந்த 2020, ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை 88 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்த உற்பத்தி வரி வசூல் ரூ.1.78 லட்சம் கோடியாகத்தான் இருந்தது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மீதான உற்பத்தி வரி கடந்த ஆண்டு லிட்டருக்கு ரூ.19.98 பைசாவாக இருந்த நிலையில், இந்த வரி உயர்வால் தற்போது ரூ.32.90 ஆக அதிகரித்துள்ளது. டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.15.83 ஆக இருந்த நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.31.80 ஆக அதிகரித்துள்ளது.
உற்பத்தி வரி வசூல் அதிகமாதத்தான் இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக டீசல், பெட்ரோல் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. கடந்த 2018-19ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.2.13 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. கடந்த நிதியாண்டில் உற்பத்தி வரி மட்டும் ரூ.3.89 லட்சம் கோடி வசூலானது. பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு என்பது சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்ப முடிவாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்துக்கு ஏற்பவும், டாலர் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு ஏற்பவும் எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை மாற்றி அமைக்கின்றன. 2017-ம் ஆண்டு, ஜூன் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ராமேஸ்வர் தெலி தெரிவித்தார்
73 முறை
கடந்த 2020-21ஆம் ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 76 முறையும், டீசல் விலை 73 முறையும் உயர்த்தப்பட்டுள்ளன. பெட்ரோல் விலை 10 முறையும், டீசல் விலை 24 முறையும் குறைக்கப்பட்டுள்ளன.