தலைமை நீதிபதி உத்தம் ஆனந்த் கொன்றவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் பரிசு
1 min read
Chief Justice Uttam Anand will be rewarded with Rs 5 lakh for providing information about the killers
15.8.2021
தலைமை நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பாக தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் பரிசு என்று சிபிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீதிபதி கொலை
ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் வசித்து வந்த உத்தம் ஆனந்த் என்ற நீதிபதி கடந்த 28-ந்தேதி காலையில் அங்குள்ள ரந்திர் வர்மா சவுக் பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ ஒன்று நீதிபதி மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட நீதிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது விபத்து இல்லை என்பதும், வேண்டுமென்றே ஆட்டோவால் மோதி நடத்தப்பட்ட கொலை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
விசாரணை
இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்தது.அத்துடன் இந்த கொடூர கொலை குறித்த விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
அத்துடன் இந்த கொலை தொடர்பாக மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் விசாரணையும், சோதனையும் நடத்தினர். இதன் பலனாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் பல்வேறு போலீஸ் நிலைய பகுதிகளில் இருந்து 243 பேரை போலீசார் பிடித்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அது மட்டுமின்றி கொலை தொடர்பாக தன்பாத் மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணையும் நடந்து வருகிறது.
ரூ.5 லட்சம் பரிசு
இந்நிலையில், ஆட்டோவால் மோதி அரங்கேற்றப்பட்ட தான்பாத் தலைமை நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பாக நம்பகமான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ இன்று அறிவித்துள்ளது.