திருச்சி சிறப்பு முகாமில் 10 பேர் தற்கொலை முயற்சி
1 min read
10 attempt suicide at Trichy special camp
18.8.2021
திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைத்திருந்தவர்கள், அளவுக்கு அதிகமான துாக்க மாத்திரைகளை தின்றும், உடலை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறப்பு முகாம்
திருச்சி, மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 63 பேர் மற்றும் வங்காள தேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்த 30 பேர், என 93 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
“பொய் வழக்கில் கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும். தண்டனைக் காலம் முடிந்து, வழக்குகளில் விடுதலை பெற்ற பிறகும், சிறப்பு முகாம் சிறையில் அடைத்து வைத்து உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். சிறப்பு முகாமில் உள்ளவர்களை, குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்” எனக் கோரி, சிறப்பு முகாமில் உள்ளவர்கள், கடந்த மாதம், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்கொலை முயற்சி
முகாம் சிறையில், கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட, 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கடந்த வாரம், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 நீதிபதி முன் ஆஜர்படுத்தி உள்ளனர்.
இந்தநிலையில், இன்று, சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்டவர்கள், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களில், டிக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் வயிற்று பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
துாக்க மாத்திரைகளை தின்றவர்களுக்கும், உடலை, அறுத்துக் கொண்டவர்களுக்கும், மத்திய சிறை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சு வார்த்தை
தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் அதிகாரிகள் முகாம் சிறைக்கு சென்று, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாஸ்போர்ட் வழக்கில் முகாம் சிறையில் அடைக்கப்பட்ட 22 பேரை, விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் , என்று கலெக்டர் சிவராசு உறுதியளித்தார்.