July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பின்நோக்கி சென்ற கார் கிணற்றுக்குள் விழுந்தது; விவசாயி பலி

1 min read

The car that went backwards fell into the well; Farmer killed

18/8/2021
பொள்ளாச்சி அருகே புதிய காரை ஓட்டியபோது பின்னோக்கி சென்று கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் விவசாயி பலியானார். லேசான காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினான்

விவசாயி

பொள்ளாச்சி அருகே உள்ள ஏ.நாகூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 63), விவசாயி. இவர் குடும்பத்துடன் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லலிதா, மருமகன் பிரதீப்குமார். இவர்களுக்கு நகுல்கிருஷ்ணன் (8) என்கிற மகன் உள்ளார். பிரதீப்குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் புதிதாக ஒரு சொகுசு கார் வாங்கி உள்ளார். இதையடுத்து அவர் புதிய காரை எடுத்துக் கொண்டு ஏ.நாகூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார்.

கிணற்றுக்குள் பாய்ந்தது

இந்த நிலையில் ஈஸ்வரன் புதிய கார் என்பதால் அதை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டார். இதனால் அவர் நேற்று தனது பேரனை ஏற்றிக் கொண்டு காரை இயக்கினார். அந்த கார் ஆட்டோ மெட்டிக் கியர் வசதி கொண்டது என்பதால் திடீரென்று பின்னால் செல்வதற்கு கியர் விழுந்தது.
இதை அறியாமல் திடீரென்று ஈஸ்வரன் காரை இயக்கியதால், பின்னோக்கி அந்த கார் வேகமாக சென்றது. அத்துடன் அங்கு இருந்த கிணற்றின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது.

40 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. கார் கிணற்றுக்குள் பாய்ந்த சத்தம் கேட்டதும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அப்போது காருக்குள் இருந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.உடனே இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விவசாயி பலி

பின்னர் அவர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி காருக்குள் இருந்து ஈஸ்வரன், நகுல் கிருஷ்ணன் ஆகியோரை மீட்டனர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த ஈஸ்வரனுக்கு தீயணைப்பு துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் அதில் எந்த பயனும் அளிக்காததால் பரிதாபமாக இறந்தார்.பேரன் நகுல் கிருஷ்ணன் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதையடுத்து அந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து குறித்து போலீசார் கூறுகையில், ஈஸ்வரனின் உடலில் எங்கும் காயமில்லை. அவர் ஸ்டியரிங் நெஞ்சு பகுதி பயங்கரமாக மோதியதால் இறந்து இருக்கலாம். இதற்கிடையில் சீட் பெல்ட் அணிந்து இருந்தால் ஏர் பலூன் வெளியாகி அவர் உயிர் தப்பி இருக்கலாம் என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.