பழனி அருகே மகனின் நோயைத் தீர்க்க முடியாததால் விவசாயி குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை
1 min read
Farmer commits suicide by setting fire to his family near Palani as he could not cure his son’s disease
21.8.2021
பழனி அருகே மகனின் நோயை தீர்க்க முடியாததால் விவசாயி ஒருவர் மனைவி, மகன், மகளுடன் விஷம் அருந்தியும், மக்காச்சோளத் தட்டைப் போருக்குத் தீ வைத்து அதனுள் சென்று உடல் கருகியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
விவசாயி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னராசு என்கிற முருகேசன் (வய 52). இவரது மனைவி வளர்மதி (45), மகள் சிவரஞ்சனி (21), மகன் கார்த்திகேயன் (18). மகள் கல்லூரிப் படிப்பை முடித்து வீட்டில் இருந்தார். மகன் பழனியில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். முருகேசன் தனக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் குடியிருந்தார். நேற்று குடும்பத்தினருடன் வேலாயுதம்புதூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பினர்.
தீயில் கருகி இறந்தனர்
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது தோட்டத்தில் உள்ள மக்காச்சோளத் தட்டை தீப்பிடித்து எரிந்தது. அருகிலுள்ள தோட்டத்தில் வசித்த அவரது உறவினர்கள் இதைப் பார்த்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பழனி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, எரிந்துகொண்டிருந்த மக்காச்சோளத் தட்டைப் போருக்குள் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது முருகேசன், அவரது மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் எனத் தெரியவந்தது.
தற்கொலை
நால்வரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பிரேதப் பரிசோதனையின் முதற்கட்டத் தகவலில் நால்வரும் விஷம் அருந்தி இருந்தது தெரியவந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில் முருகேசன் மகன் கார்த்திகேயனுக்கு சிறுநீரகக் கோளாறு இருந்து வந்ததாகவும், சிகிச்சை எடுத்தும் பலனில்லாத நிலையில் முருகேசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் விஷம் அருந்தித் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர்கள் ஏன் மக்காச்சோளத் தட்டைப் போருக்குத் தீ வைத்து அதனுள் இறந்து கிடக்க வேண்டும் என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்காமல் உள்ளது. இதனால் ஆயக்குடி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.