காபூலில் இரட்டை குண்டுவெடிப்பில் அமெரிக்க வீரர்கள் உள்பட 73 பேர் பலி
1 min read
A double bombing in Kabul has killed at least 73 people, including US soldiers
27.8.2021
காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 73 பேர் உயிரிழந்தனர்.
காபூலில் இருந்து வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேற உள்ளன. தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன
இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
ஆகஸ்டு 31-ம் தேதிக்கு பின்னர் காபூலில் மீட்புப்பணிகளும் நிறுத்தப்பட்டு படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இதனால், ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்தவண்ணம் உள்ளன.
குண்டு வெடிப்பு
இதற்கிடையில், காபூல் விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆகும். எஞ்சிய 60 பேர் ஆப்கானியர்கள் ஆவர்.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறினார்.