டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கைது
1 min read
Female inspector arrested for stealing Rs 10 lakh from Taylor
27.8.2021
மதுரையில் டெய்லரிடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தியை போலீசார் கைது செய்தனர்.
பணம் பறித்த சப்-இன்ஸ்பெக்டர்
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த அர்ஷத். டெய்லரான இவர் பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் கடனாக ரூ.10 லட்சம் வாங்கினார். அந்த பணத்தோடு கூடுதல் பணத்தேவைக்காக பாண்டி என்பவர் அழைத்தன்பேரில் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேததி நாகமலை புதுக்கோட்டைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றார். சிறிது துாரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு அர்ஷத்தை இறக்கிவிட்டார். பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்துவிடுவேன் என மிரட்டினார். மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின் பேரில் இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேனியை சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் உக்கிர பாண்டியிடமிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரமும், சீமைச்சாமியிடம் இருந்து 45 ஆயிரமும் கைப்பற்றினர். அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருந்த மதுரை நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இன்று அவர் கைது செய்யப்பட்டார்.