12 உயர்நீதிமன்றங்களுக்கு பழங்குடி பெண் உள்பட 68 நீதிபதிகள் பெயர் பரிந்துரை
1 min read
Nominated 68 judges for 12 high courts, including a tribal woman
4.9.2021
இந்தியாவில், 12 உயர்நீதிமன்றங்களுக்கு, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 68 நீதிபதிகளை மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மாதம் (ஆகஸ்டு) 25 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையில் கொலிஜியம் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், அலகாபாத், ராஜஸ்தான், கோல்கட்டா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர், சென்னை, ம.பி., கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ஹரியானா, கேரளா,சத்தீஸ்கர், கவுகாத்தி உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.
நீதிபதி பதவிக்கு மொத்தம் 112 பேரின் பெயர்களை கொலீஜியம் பரிசீலனை செய்தது. அதில், 82 பேர் வழக்கறிஞர் சங்கத்தையும், 31 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பரிசீலனை முடிவில் பரிந்துரை செய்யப்பட்ட 68 நீதிபதிகளில் 44 பேர் வழக்கறிஞர் சங்கத்தையும், 24 பேர் நீதித்துறையையும் சேர்ந்தவர்கள்.
பழங்குடியின பெண்
நீதிபதியாக பரிந்துரையில் பழங்குடியினத்தை சேர்ந்த பெண் நீதிபதியான, மிசோரத்தை சேர்ந்த மார்லி வான்குங்கை, கவுகாத்தி உயர்நீதிமன்றத்திற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது இது முதல்முறையாகும். கொலிஜியம் பரிந்துரையில் 10 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 16 பேர் குறித்த விவரங்களையும் நீதிபதிகள் கேட்டு உள்ளனர்.