உள்ளாட்சி தேர்தலுக்கு மேலும் அவகாசம் அளிக்கதேர்தல் ஆணையம் மனு
1 min read
Petition to the Election Commission to give more time for local elections
4.9.2021
‛‛தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் அளிக்க வேண்டும்,” எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2019ல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வந்தது. 9 மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
அவகாசம்
இந்நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரு முறை அவகாசம் கோரப்பட்ட நிலையில், தற்போது 3வது முறையாக அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பருக்குள்…
இந்நிலையில், சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை. நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். உள்ளாட்சி தேர்தலை விரைவில் முடிக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. வார்டு வரையறை பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.
புதிய நகராட்சி, மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளதால், வார்டு வரையறை பணிகள் செய்ய வேண்டி உள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து கட்சி கூட்டம்
இதனிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. பிற்பகல் 12 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இந்த கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.