போலீசார் பொது மக்களை வாடி.. போடி.. வா.. போ.. என பேசக்கூடாது; ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Police should not speak disrespectfully of the public; High Court order
4.9.2021
போலீசார் பொதுமக்களை ‘வாடி… போடி’ ‘வா, போ’ என மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அவமரியாதை பேச்சு
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சேர்தலா பகுதியை சேர்ந்தவர் அணில் குமார். இவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-
இரு நாட்களுக்கு முன், 16 வயது மகளுடன் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன் அப்போது வழிமறித்த சேர்தலா போலீசார் விசாரணை என்ற பெயரில், அவமரியாதையாக என்னை பேசினர்.
குறிப்பாக, என மகளின் முன் ‘எடா… வா, போ’ என, மரியாதைக் குறைவாகவும் இழிவாகவும் பேசினர். பொது மக்களை கவுரவமாக நடத்த போலீசாருக்கு கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறியதாவது:-
போலீசார் பொதுமக்களை பல்வேறு இடங்களில் மிகவும் மோசமாக நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எக்காரணம் கொண்டும் பொதுமக்களை போலீசார் தரக்குறைவான வகையில் நடத்தக்கூடாது.
போலீசாரின் முன்னால் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும்.பொதுமக்களை அநாகரீகமாக நடத்துவதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, கேரள முழுவதும் போலீசார் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை ‘வா, போ’ என ஒருமையில் அழைத்து பேச கூடாது. ‘எடா…
எடீ…’ மற்றும் ‘வாடி… போடி’ என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்கக்கூடாது. இது தொடர்பாக கேரள போலீஸ் டி.ஜி.பி., அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து உடனடியாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.