“காஷ்மீர் முஸ்லிம்களுக்காக நீங்கள் ஒன்றும் குரல் கொடுக்க வேண்டாம்”; தலிபான்களுக்கு முக்தர் அப்பாஸ் வேண்டுகோள்
1 min read
“You have no voice for Kashmir Muslims”; Mukhtar Abbas appeals to the Taliban
4/9/2021
‛‛தலிபான் பயங்கரவாதிகளிடம் இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தியாவில் அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்படுகிறது. எனவே காஷ்மீர் முஸ்லிம்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டாம் ,” என்று, மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பி.பி.சி. (உருது) சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:-
நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் எங்கு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் எழுப்புவோம். காஷ்மீர் முஸ்லிம்கள், இந்திய முஸ்லிம்கள், எந்த நாட்டிலும் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.
அதே நேரம் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்துவது எங்கள் கொள்கை அல்ல. நாங்கள் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்போம். ஏனென்றால் முஸ்லிம்கள் எங்கள் சொந்தங்கள், எங்கள் சொந்த மக்கள். உங்கள் சட்டப்படி அவர்களுக்குச் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய மந்திரி
தலிபான்களின் இந்தப் பேச்சுக்கு பதில் அளித்து மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நான் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விட்டுவிடுங்கள். இங்கு மசூதிகளில் தொழும் முஸ்லிம்கள் யாரும் துப்பாக்கி தோட்டாக்களாலும், வெடிகுண்டுகளாலும் தாக்கப்படவில்லை.
பெண் குழந்தைகள் பள்ளி செல்வதை யாரும் தடுக்கவில்லை. அவர்களின் தலைகள், கால்கள் வெட்டப்படவில்லை. இந்த அரசு அரசியலைமைப்புச் சட்டத்தை பின்பற்றி நடக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமமான உரிமை, முழுமையான வளர்ச்சி, ஒவ்வொருவரின் பங்களிப்புக்கும் உறுதி செய்து அதன்படி செயல்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.