July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பாரதியாரின் நினைவு நாளை ‘மகாகவி நாளாக’ மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min read

MK Stalin’s announcement of Bharathiyar Memorial Day as ‘Mahakavi Day’

11.9.2021
பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாகவி பாரதியார்

“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா” என்று கவிமணி தேசிக விநாயகம் பாடினார். இப்படி கவிமணியையே பாடவைத்த பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றும் அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துவிட்டு உரையாற்றும்போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டை குறிப்பிட்டு காட்டினேன். நூறாண்டுகள் கழித்து மட்டுமன்று, ஆயிரமாண்டுகள் கழித்தும் உயிரோட்டமுள்ள கவிதைகளை, பாடல்களை தமிழ்ச் சமுதாயத்துக்கு விட்டுச் சென்றவர்தான் மகாகவி என்று போற்றப்பட்ட பாரதியார்.

புதுயுகத்தை படைக்க நினைத்தவர்

தேசப்பற்று – தெய்வப்பற்று – தமிழ்ப்பற்று – மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர்தான் பாரதியார். நாட்டு விடுதலைக்காக போராடியவராக மட்டுமே இருந்திருந்தால் அதற்காக மட்டுமே அவர் நினைவுகூரப்பட்டிருப்பார். அதையும் தாண்டி சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் எழுதியதால்தான் பாரதியார் கவிதை வரிகளாய் உலவி வருகிறார்.

பாரதியார் வரகவியா, மகாகவியா, தேசியக்கவியா என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலத்தில் 1947-ம் ஆண்டே பாரதியாரை ‘மக்கள் கவி’ என்று எழுதியும் பேசியும் தொடங்கியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு பக்கம் நிலப்பிரபுத்துவம் – இன்னொரு பக்கம் சனாதனம் – இந்த இரண்டுக்கும் இடையில் இருந்து புதுயுகத்தை படைக்க நினைத்தவர் பாரதி என்று அண்ணா எழுதினார்.

14 அறிவிப்புகள்

அதனால்தான் தி.மு.க. அரசு அமைந்து, தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சரானபோது எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கினார். அன்றைய அமைச்சர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் 12-5-1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

மகாகவி நாள்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ந் தேதி, அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ‘ பாரதி இளங்கவிஞர் விருது’ மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு பாரதி புத்தகம்

பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.

ஆய்வாளர்களுக்கு விருது

மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர்களின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி.விசுவநாதனுக்கும், பேராசிரியர் ய.மணிகண்டனுக்கும், தலா ரூ.3 லட்சமும், விருதும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.

பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும்.

‘பாரதியியல்’ தனிப்பிரிவு

பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும் பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் கருணாநிதி நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு ‘பாரதியியல்’ என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

இசைக் கச்சேரி

உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் ‘பாரெங்கும் பாரதி’ என்ற தலைப்பில் நடத்தப்படும். திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக் கச்சேரி ‘திரையில் பாரதி’ என்ற நிகழ்வாக நேரு உள்விளையாட்டு அரங்கில் கொரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

குறும்படம்

உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும். பாரதியார் படைப்புகளை குறும்படம் மற்றும் நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளை பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும், வரைந்தும் பரப்பப்படும். பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.

எழுத்தும் தெய்வம் – எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியை போற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.