July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

குஜராத் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்பு

1 min read

Bhupendra Patel appointed new Gujarat Chief Minister

13.9.2021

குஜராத் புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்றுக்கொண்டார்.

குஜராத் முதல்மந்திரி

குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில் திடீரென முதல்-மந்திரி விஜய்ரூபானி ராஜினாமா செய்துள்ளார்.

வேறு நபரை முதல்-மந்திரியாக தேர்வு செய்ய கட்சி மேலிடம் விரும்பியதை அடுத்து அவர் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று புதிய முதல்-மந்திரி தேர்வு நடந்தது.

இதற்காக அகமதாபாத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. மொத்தம் உள்ள 182 எம்.எல்.ஏ.க்களில் 112 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய மந்திரிகளில் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் மேலிட பார்வையாளராக கலந்து கொண்டனர்.

பூபேந்தி பட்டேல்

இதில் பூபேந்திர பட்டேல் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். முதல்-மந்திரியாக வருவார்கள் என்று 5-க்கும் மேற்பட்ட நபர்கள் பெயர் அடிபட்டது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட தேர்வு செய்யப்படாமல் முதல் தடவை எம்.எல்.ஏ.வான பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டார்.

பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள்தான் பூபேந்திர பட்டேலை தேர்வு செய்ததாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் எம்.எல்.ஏ.க்கள் அவரை தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது.

புதிய முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மந்திரி சபை இன்று பிற்பகலில் பதவி ஏற்றது. கவர்னர் ஆச்சாரியா தேவரத் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் முன்னணி தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர்.

ஆனந்தி பென்

பூபேந்திர பட்டேலை முதல்-மந்திரியாக தேர்வு செய்ததில் முன்னாள் முதல்-மந்திரியும், உத்தரபிரதேச கவர்னருமான ஆனந்தி பென் பட்டேல் பங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது அகமதாபாத்தில் உள்ள காத்லோடியா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

2017-ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதி பூபேந்திர பட்டேலுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது ஆனந்தி பென் பட்டேல் தனது பேத்திக்கு டிக்கெட் வாங்குவதற்கு முயற்சித்தார். ஆனால் கட்சி மேலிடம் பூபேந்திர பட்டேலுக்குத்தான் டிக்கெட் கொடுத்தது.

அதில் ஒரு லட்சம் ஓட்டுக்கு மேல் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். அந்த தேர்தலில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக பூபேந்திர பட்டேல் திகழ்ந்தார். இவர் ஆனந்தி பென் பட்டேலின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்து வந்தார்.

ஊழலில் சிக்காதவர்

பூபேந்திர பட்டேல் எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். ஊழல், முறைகேடுகள், கிரிமினல் குற்றம் என எதுவும் அவர் மீது இல்லை. அமைதியான குணம் உடையவர். இதுபோன்ற காரணங்களால்தான் பூபேந்திர பட்டேலை ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக்க விரும்பினார்.

அது மட்டுமல்ல. பூபேந்திர பட்டேல் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் நெருக்கமானவர். அமித்ஷா எம்.பி.யாக உள்ள காந்திநகர் தொகுதியில்தான் பூபேந்திர பட்டேல் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எனவே அமித்ஷாவின் சிபாரிசும் அவருக்கு இருந்துள்ளது.

பட்டேல் சமூகம்

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு பெரும் ஆதரவாக இருந்து வந்த பட்டேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு மற்றும் பல்வேறு பிரச்சினை காரணமாக கடந்த தேர்தல் காலத்தில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாறினார்கள். அந்த மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினர் 13 சதவீதம் பேர் உள்ளனர்.

அவர்கள்தான் பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். இந்த சமூகத்தினர் அதிகமாக உள்ள சவுராஷ்டிரா லதேர் பகுதிகளில் 13 இடங்கள் வரை பாரதிய ஜனதா இழந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் பாரதிய ஜனதாவுக்கு நெருங்கி அதிக இடங்களை கைப்பற்றியதற்கு பட்டேல் சமூகத்தினரின் எதிர்ப்புதான் காரணமாக இருந்தது.

எனவே இந்த தடவை பட்டேல் சமூகத்தினருக்கு முதல்-மந்திரி வாய்ப்பு அளித்தால் அந்த சமூகத்தினரின் எதிர்ப்பு மறைந்து விடும் என்று பாரதிய ஜனதா கருதியது. இதனால்தான் பூபேந்திர பட்டேலை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

இவர் பட்டேல் ஜாதியில் உள்ள ஒரு பிரிவான கத்வா பதிதார் சமூகத்தை சேர்ந்தவர். மேலும் முதல்-மந்திரி விஜய்ரூபானி மீது கடும் அதிருப்தி நிலவியது.

இந்த நிலையில் எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த நபரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவரை தேர்வு செய்துள்ளனர்.

சமீபகாலமாக 60 வயதுக்குட்பட்டவர்கள் அல்லது அதை ஒட்டி இருப்பவர்களை தேர்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பூபேந்திர பட்டேலுக்கு தற்போது 59 வயதாகிறது. இவர் என்ஜினீயரிங் படித்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார். பட்டேல் சமூகத்தில் பல்வேறு அமைப்புகளின் தலை வராகவும் அவர் இருந்து வருகிறார். மேலும் பல்வேறு சமூக பொறுப்புகளிலும் நிர்வாகியாக உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.