காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் மரணம்
1 min read
Death of senior Congress leader Oscar Fernandez
13.9.2021
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டஸ் மரணம் அடைந்தார்.
ஆஸ்கார் பெர்னாண்டஸ்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.
ஆஸ்கார் பெர்னாண்டஸ் கடந்த ஜூலை மாதம் தனது வீட்டில் யோகா பயிற்சி செய்தபோது தவறி விழுந்ததால் காயமடைந்தார். உடனடியாக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது. அதன்பின்னர் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் பிரிந்தது.
ஆஸ்கார் பெர்னாண்டஸ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் நெருக்கமானவரான பெர்னாண்டஸ், ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார்.
1980-ல் கர்நாடகாவின் உடுப்பி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து 1984, 1989, 1991 மற்றும் 1996 ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998 மற்றும் 2004ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.