தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டும்; பாலகுருசாமி கோரிக்கை
1 min read
To implement the National Education Policy in Tamil Nadu; Balagurusamy request
6/10/2021
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, நுண்ணறிவுள்ள ஆவணமான தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதம்
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான இ.பாலகுருசாமி, முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தேசியக் கல்விக் கொள்கை
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்திய உயர்கல்வி அமைப்பின் ஓர் உயரிய அமைப்பான இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கமும் தேசிய கல்வித் திட்டத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் அப்பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.
உயர் கல்வியை தேசிய அளவில் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளான பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தேசிய ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு இக்கல்விக் கொள்கையைப் படிப்படியாகச் செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளன.
மக்களவையில் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு, மேற்கு வங்கம் நீங்கலாக அனைத்து மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான முன்முயற்சிகளைத் தொடங்கிவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலங்களில் இக்கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முறையான நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கல்விக் கொள்கை, கல்வித் தரம், கற்பித்தல் முறை, கட்டமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், கல்வியை மாணவர்கள் அணுகுவதில் உள்ள சமச்சீரற்ற நிலை எனப் பல்வேறு வகையான சிக்கல்களைக் களைவது உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. அத்துடன், இந்தியாவின் 21-வது நூற்றாண்டு விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்தியாவை, துடிப்பான அறிவாற்றல் மிக்க வல்லரசாக உருவாக்குவதை உறுதி செய்கிறது.
முக்கிய பரிந்துரை
இந்தக் கல்விக் கொள்கையில் உள்ள சில முக்கியமான பரிந்துரைகள் வருமாறு:-
· பள்ளிக் கல்வியில் கட்டமைப்பு மாற்றங்கள்
· தொடக்க நிலையில் தொழில் கல்வியை வலியுறுத்துதல்
· பட்டப்படிப்பில் தாராளமான நடைமுறை
· கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பல்வகைத் துறைக் கல்வி
· பட்டப்படிப்புகளில் விருப்பம் போல் சேருதல், வெளியேறுதல்
· கல்வி வங்கிக் கடன் அமைப்பு என்ற நடைமுறை
· உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம்
· தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைத்தல்
· ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதில் தனிக் கவனம்
· 21-ம் நூற்றாண்டுத் தேவைக்கான திறன்களை வலியுறுத்தல்
· கல்வியில் நவீன தொழில்நுட்பம்
· எளிதான உறுதியான ஒழுங்குமுறை கொண்ட அமைப்பு
தரம் குறைந்தது
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2005-ம் ஆண்டு கொண்டுவந்த தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு கொள்கையைப் பள்ளிக் கல்வியில் செயல்படுத்தாமல் போனதைப் போல் உயர் கல்வியிலும் மாநில அரசு செய்யக் கூடாது. 2005-ம் ஆண்டு கொண்டுவந்த தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு கொள்கையைச் செயல்படுத்தாமல் போனதால், பள்ளிக் கல்வியின் தரம் குறைந்து தேசிய அளவிலான ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை நமது மாணவர்கள் பெறாமல் போயினர்.
நீட் தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் நேர்ந்ததற்கு நமது மாணவர்களின் திறன் குறைவு என்பது காரணமல்ல, அவர்கள் பெறும் பள்ளிக் கல்வியின் தரம் குறைந்துவிட்டதும், கற்றல் – கற்பித்தல் முறையின் தரம் குறைந்துவிட்டதுமே காரணங்கள் ஆகும்.
செயல்படுத்த வேண்டும்
உயர் கல்வி என்பது உலகளாவிய வாய்ப்புகளுக்கான சாளரம் போன்றது. 21-ம் நூற்றாண்டில் நமது மாணவர்கள் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவதற்கான வாய்ப்புகளை நாம் மறுக்கவே கூடாது. தேசியக் கல்விக் கொள்கையை (தேவைப்படும் மாற்றங்களுடன்) தமிழ்நாடு செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் நமது மாணவர்கள் இதர மாநில மாணவர்களைவிடப் பின் தங்காமல் முன்னேறிச் செல்வார்கள்.
தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடம் பெற்றுள்ளது என்றும் அதனால் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தத் தேவையில்லை என்றும் சில தலைவர்கள் கூறுவதாக அறிகிறோம். இது துரதிர்ஷ்டவசமான கருத்து மட்டுமின்றி, சிந்திக்காமல் வெளியிடும் கருத்தும் ஆகும். தமிழகத்தில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், தரமான கல்வியைப் பெறுகிறார்களா என்பது கேள்விக்குறி.
போட்டித் திறனுள்ள பட்டதாரிகள், வேலைவாய்ப்புத் திறனுள்ள பட்டதாரிகளின் தர வரிசையில் தமிழகம் மிகவும் கீழே இருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொழிலக அமைப்புகள் தமிழகத்தில் பட்டம் பெறுவோரில் 15 முதல் 20 விழுக்காட்டினர் மட்டுமே வேலைவாய்ப்புக்கான திறன் உள்ளவர்கள் என்று கூறுகின்றன. இனிமேலும் உயர்கல்வியின் தரம் குறித்து அலட்சியமாக இருப்பது கூடாது.
கல்வி மத்திய அரசுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. எனவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள கல்வித் திட்டம் குறித்த முடிவுகளைச் செயல்படுத்துவது அனைத்து மாநிலங்களின் கடமை என நம்புகிறோம். அவ்வாறு மத்திய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாத மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது நிர்வாகத்தில் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அவற்றில் பயிலும் மாணவர்களுக்கும் சிக்கல் நேரும் என்பது கவனிக்கத்தக்கது.
மேலும்..
நல்ல வாய்ப்பு
- மாணவர்கள் தங்களது கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியில் சாதிப்பதற்கும் அமையும் நல்ல வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
- அவர்கள் கல்வி கற்கும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும், உருவாக்கப்பட இருக்கும் இந்திய உயர்கல்வி ஆணையத்தின் நெறிகள் காரணமாகப் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
- மாணவர்கள் தங்களது ஆராய்ச்சித் திட்டங்கள், கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய நிறுவனங்களிலிருந்தும் பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்தும் கிடைக்க வேண்டிய நிதியைப் பெறுவதில் இடர்களைக் காண நேரும்.
தேசியக் கல்விக் கொள்கை ஒரு விரிவான, தீவிரமான மற்றும் நுண்ணறிவுள்ள ஆவணம் ஆகும். அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிவகைகளைக் கொண்ட அற்புதமான வழிகாட்டு நடைமுறைகளைக் கொண்டது. தமிழக மாணவர்களின் எதிர்கால நலன்களை மனத்தில் கொண்டு, தமிழக அரசு இக்கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம், விரும்புகிறோம். அதே சமயம் மாநில அரசு தனது தேவைகள், விருப்பங்களுக்கு உகந்த வகையில் இதன் அம்சங்களை மாற்றியும் புதிதாக இணைத்தும் செயல்படுத்திக் கொள்ளலாம் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு பேராசிரியர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.