விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம் – சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
1 min read
Government may decide to open temples on Vijayadasamy – Chennai high Court verdict
12/10/2021
விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
கோவிலை திறக்க மனு
கோவையை சேர்ந்தவர் ஆர்.பொன்னுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதும், ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
ஆனால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது. அன்று தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கோவில் திறக்காது.
சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை திறக்க அரசு அனுமதிக்கிறது. ஆனால், துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அரசு பிடிவாதமாக செயல்படுகிறது. எனவே, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களைத் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.
இது அவசர வழக்காக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராயிருந்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஒன்றிய அரசினுடைய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மீதான விசாரணை பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கலாம்
அதன்படி பிற்பகல் விசாரணை தொடங்கியது. அப்போது விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதல்- அமைச்சர் நாளை ( அதாவது இன்று) நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தது.