சீன எல்லையோர சுரங்கப் பாதை: இறுதிக்கட்ட பணியை தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்
1 min read
Chinese border tunnel: Rajnath Singh begins finalization
14.10.2021
அசாம் – அருணாச்சல் மாநிலங்களுக்கிடையே மழை, பனி காலங்களிலும் தடைப்படாத போக்குவரத்தை உறுதி செய்யும் வகையிலான சேலா மலைப்பாதையில் இரு வழி சுரங்கம் அமைப்பதன் இறுதிக் கட்ட பணிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
3 கிலோ மீட்டர்
அசாம் – அருணாச்சல் மாநிலங்களுக்கிடையே சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. மழை, பனி காலங்களிலும் தடைப்படாத போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
சேலா சுரங்கப்பாதை 3 கி.மீ. தூர உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகும். 13,000 அடி உயரத்திற்கு மேல் இதனை எல்லை சாலை நிறுவனம் அமைத்து வருகிறது. 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி இச்சுரங்கப்பாதை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு பணிகள் தொடங்கி துரிதமாக நடைப்பெற்று வருகிறது. கோவிட் மற்றும் மோசமான வானிலை காலங்களிலும் பணிகள் வேகமெடுத்துள்ளது. ஜூன் 2022-ல் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தின் பலிபரா – அருணாச்சலின் தவாங் இடையிலான தேசிய நெடுஞ்சாலை வழியே இந்த சேலா சுரங்கப் பாதை அமைகிறது. இதன் மூலம் பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும். அருணாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். மிக முக்கியமாக அசாமின் தேஸ்பூரை தலைமையிடமாக கொண்டுள்ள ராணுவத்தின் நான்காம் படையை விரைவாக சீன எல்லையோர பகுதியான தவாங்கிற்கு அனுப்ப முடியும்.
மேலும் அனைத்து கால நிலைகளிலும் தடையின்றி இந்த சாலை வழியாக பயணிக்கலாம் என்பது இதன் சிறப்பு.
இறுதிக்கட்டப் பணி
இந்நிலையில் இந்த சுரங்கப்பாதையின் முக்கியமான இறுதிக்கட்ட பணியினை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்த படி காணொளி காட்சி மூலமாக பார்வையிட்டார். “எல்லை சாலை நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. கடின உழைப்பின் மூலம் எல்லாம் அடைய முடியும் என்ற குறிக்கோளுக்கு உண்மையாக இருக்கிறது. ரோஹ்தங்கில் கட்டப்பட்ட அடல் சுரங்கம் முதல் தற்போதைய சேலா சுரங்கம் வரை எல்லை சாலை நிறுவனத்தின் கடந்த சில ஆண்டுகால சாதனைகள் குறித்து ஆராய்ச்சியே செய்யலாம்” என்றார்.