காஷ்மீரில் தொடரும் துப்பாக்கி சூடு; இன்றும் 2 பேர் படுகொலை
1 min read
Continued firing in Kashmir; 2 people still murdered today
17.10.2021
காஷ்மீரில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் படுகொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து உள்ளது. இந்த மாத முதல் வாரத்தில் 7 பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர்.
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஈத்கா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பானிப்பூரி விற்பனை செய்யும் அரவிந்த் குமார் ஷா என்பவர் கொல்லப்பட்டார். இவர் பீகாரின் பங்கா நகரை சேர்ந்தவர்.
இதேபோன்று புல்வாமாவில் சாகிர் அகமது என்ற நபரும் பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். இவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் நகரை சேர்ந்தவர். பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் காஷ்மீர் மண்டல போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
2 தொழிலாளர்கள்
இந்த நிலையில், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ நகரில், காஷ்மீரை சேராத தொழிலாளர்கள் சிலர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் ராஜா ரேஷி தேவ் மற்றும் ஜோகிந்தர் ரேஷி தேவ் என தெரிய வந்துள்ளது. சன்சன் ரேஷி தேவ் என்ற மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார். இவர்கள் 3 பேரும் பீகாரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதனை சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. பண்டிகை காலங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலை அதிகரிப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.