சபரிமலை கோவிலுக்கு செல்ல 21-ந் தேதி வரை தடை
1 min read
Ban on going to Sabarimala temple till 21st
18.10.2021
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சபரிமலை கோவிலுக்கு வருகிற 21 -ந் தேதி வரை செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் துலா மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. அவ்வாறு திறந்து வைப்பது ஆண்டு வழக்கம் என்றும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது. மேலும் அந்நாளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கடந்த 17ம் தேதி முதல் வருகிற 21 வரை சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இத்தகைய தரிசனம் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவஸ்தானத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இல்லையெனில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தடை
இந்நிலையில் தற்போது பருவமழை தொடங்கி கேரளாவில் மிக கனமழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் அய்யப்பன் கோவில் தரிசனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை வருகிற 21-ந் தேதி வரை ரத்து செய்வதாக அம்மாநில வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் கூறியுள்ளார்.