மதுரை அருகே ஆட்டோவில் கடத்தி வந்து 2 வாலிபர்கள் படுகொலை
1 min read
2 youths abducted in an auto near Madurai and murdered
14.11.2021
மதுரை அருகே ஆட்டோவில் கடத்தி வந்து 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசில் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெட்டிக்கொலை
மதுரை ஒத்தக்கடை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திண்டியூர் கிராமத்தில் உள்ள கண்மாய் கரைப்பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையானவர்களில் ஒருவர் மதுரை மதிச்சியம் ராமராயமண்டபம் பகுதியை சேர்ந்த செல்லபாண்டி (வயது 23) என்பது தெரியவந்தது. மற்றொருவர் அவருடைய நண்பர் என்பதும், திருச்சியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால், முழுமையான தகவல் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினர். மேலும், கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணங்களை கண்டறியும் வகையில் தனிப்படையும் அமைக்க உத்தரவிட்டனர்.
ஆட்டோவில் கடத்தல்
விசாரணையில், செல்லபாண்டி மற்றும் அவருடன் கொலையானவரை, ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை அங்குள்ள கண்மாய் கரைக்கு அழைத்து சென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இருப்பினும் முழுமையாக காரணங்கள் தெரியாத காரணத்தால், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கொலையான செல்லபாண்டியின் சகோதரர் மணிகண்டன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த கொலைகள் நடந்ததா என்பது பற்றியும், கொலையான 2 பேருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.