July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

1 min read

Opening of Sabarimala Walk for Zonal Puja

15.11.2021
மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (நவ.15) மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் 41 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறுவது மண்டல கால பூஜை. கேரளாவில் இன்று கார்த்திகை பிறக்கிறது. இதற்காக மாலை 5 மணிக்கு பதவிகாலம் நிறைவு பெறும் மேல்சாந்தி ஜெயராஜ்போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார்.

பின்னர் 18-ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின்னர் அங்கு இருமுடி கட்டுடன் வந்திருந்த புதிய மேல்சாந்தி சபரிமலை- பரமேஸ்வரன் நம்பூதிரி, மாளிகைப்புறம்-சம்பு நம்பூதிரி ஆகியோரை கைபிடித்து ஸ்ரீகோயில் முன்புறம் அழைத்து வந்தார். இரவு 7 மணிக்கு ஜெயராஜ் போற்றிக்கு அபிஷேகம் நடத்திய தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லி கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். இதுபோல மாளிகைப்புறம் கோயில் முன்பும் சம்புநம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி ஸ்ரீகோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் ஆரம்பமாகும். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகம் தொடங்கி வைப்பார். இந்த சீசனிலும் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்ய செல்ல முடியாது. பக்தர்களிடம் நெய் பெற்ற பின்னர் அதை தேவசம்போர்டு ஊழியர்கள் கொண்டு சென்று அபிஷேகத்துக்கு கொடுப்பார்கள்.இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.

எல்லா நாட்களிலும் கணபதிஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், உச்சபூஜை. தீபாராதனை, அத்தாழபூஜை ஆகியவற்றுடன் படிபூஜை, உதயாஸ்தமானபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 30 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.

பக்தர்கள் தரிசனம்

இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். தற்போது பத்தணந்திட்டையில் பெருமழை பெய்து வருவதால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு குறைந்த பின்னர் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். மலை ஏறவும், இறங்கவும் சுவாமி ஐயப்பன் ரோடு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். சன்னிதானத்தில் தங்க முடியாது. முன்பதிவு செய்ய முடியாதவர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவுடன், உரிய சான்றிதழுடன் செல்லும் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர். பத்தணந்திட்டை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சபரிமலை செல்லும் வாகனங்கள் பல இடங்களில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.