சபரிமலை பக்தர்கள் பம்பையில் புனித நீராட தடை
1 min read
Sabarimala devotees banned from bathing in Pambai
15.11.2021
சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் பக்தர்களுக்கு பம்பையில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலை
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து கொல்லம் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு கேரள அரசு விடுமுறை அளித்து உள்ளது.
நேற்றுமுன்தினம் பெய்த கன மழையால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகள், வீடுகள் மூழ்கும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மந்திரிகள், மாவட்ட காலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பம்பையில் குளிக்கத் தடை
பம்பை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) வரை முன்பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். தற்காலிக அவசர முன்பதிவு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 10-ந் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் இல்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.