நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் கெடு
1 min read
Vanniyar Sangam deadline for actor Surya
15.11.2021
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்ததற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் சூர்யா
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.
கண்டனம்
படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது. ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
நோட்டீஸ்
இந்நிலையில் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ‘படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என்று மனுதாரர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.