ஸ்ரீநகரில் 2 தொழிலதிபர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி
1 min read
2 businessmen shot dead in Srinagar
16.11.2021
பயங்கரவாதிகளுக்கு எதிராக ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 2 தொழிலதிபர்கள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இறந்த தொழிலதிபர்கள் இருவரும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகள்
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. வெளிமாநில தொழிலாளர்கள், அங்குள்ள பண்டிட்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினத்தவர்களை குறிவைத்து தாக்குகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, ஸ்ரீநகரின் டவுன்டவுன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இந்நிலையில் ஸ்ரீநகரில் நேற்று (திங்கட்கிழமை) மாலை பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் இறங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டனர். அதில் இருவர் தொழிலதிபர்கள்.
ஒருவர் பல் மருத்துவர் முட்சிர் குல். இவர் ஐதர்போரா பகுதியில் வணிக வளாகத்தில் கணினி மையம் நடத்தி வந்துள்ளார். மற்றொருவர் அல்தாப் பட். இவர் அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர். அங்கு ஹார்ட்வேர்ஸ் மற்றும் சிமெண்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார்.
அடக்கம்
இவ்விருவரையும் மனித கேடயமாக பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி கொலை செய்ததாக அவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இருவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள ஹந்த்வாராவில் அடக்கம் செய்யப்பட்டது.
இது குறித்து காஷ்மீர் ஐ.ஜி., விஜயகுமார் கூறியதாவது:
முடாசிரின் கணினி மையம் அங்கீகரிக்கப்படாத கால் சென்டர் ஆக செயல்பட்டுள்ளது. அதில் 6 கணினிகள் இருந்தன. அந்த வணிக வளாகம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. இருவரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனரா அல்லது பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா என்பது தோட்டாவை வைத்து விசாரிக்கும் போது தெரியும்.
பிஸ்டல் தோட்டா என்றால் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார் என அர்த்தம். ஏ.கே., ரக தோட்டா என்றால் எங்கள் தோட்டாவால் இறந்துள்ளார் என கூற முடியும். இறுதிச் சடங்கிற்கு அவர்கள் குடும்பத்தினரை அணுகினோம். அவர்கள் உடலை ஒப்படைக்கக் கோரினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அது முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.