நீலகிரி மாவட்ட கலெக்டரை பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி
1 min read
Supreme Court approves transfer of Nilgiris District Collector
16.11.2021
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்குத் தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை ஐகோர்ட்டு 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
அப்போது, நீலகிரியில் யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அகற்றவும் மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் நீலகிரி மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.
2017 ஆம் ஆண்டிருந்து நீலகிரி கலெக்டராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யும் சூழல் நிலவியபோது, அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று இந்த வழக்கில் முறையிடப்பட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டு, இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்ய இடைக்காலத்தடை விதித்தது.
உத்தரவு
இதையடுத்து, நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்ததையடுத்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.