ஜீவசமாதி அடைவதாக கூறி சாமியார் சாவு
1 min read
Death of a preacher claiming to attain Jiva Samadhi
18.11.2021
ஜீவசமாதி அடைய போவதாக கூறி சாமியார் மூச்சு திணறி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாமியார்
திண்டுக்கல் சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கரந்தமலை (வயது 75). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
இதனால் இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் ஆன்மீகத்தில் அதிக பற்று கொண்டதால் குறி சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இந்த நிலையில் இவரிடம் குறி பார்ப்பதற்காக பக்தர்கள் நேற்று வந்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் சாமி அறையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியது.
ஜீவசமாதி
இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்களிடம் நான் ஜீவ சமாதி அடைந்து கடவுளிடம் செல்கிறேன் எனக் கூறி வந்துள்ளார்.
மேலும் கரந்தமலை அவரது சாமி அறையில் 6 அடி பள்ளம் தோண்டி அதைச் சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளார். பின்னர் அந்த பள்ளத்தில் அமர்ந்து மணல் மூட்டைகளை கீரி விட்டுள்ளார். இதனால் அதில் இருந்து சிதறி விழுந்த மணலால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கரந்தமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.