ஈரோடு அருகே சாலை விபத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் சாவு
1 min read
Five killed in road accident near Erode
18.11.2021
ஈரோடு அருகே லாரியும் மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
விபத்து
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பாரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மதியம் லாரியும் மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மாருதி வேனில் பயணம் செய்த எட்டு பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது பற்றி விவரம் வருமாறு,
மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி கிராமம் முத்து கவுண்டன் பாளையம் பி.கே.எஸ் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 20). இவரது உறவினர்களான மஞ்சு (வயது 18) தெய்வாணை, அருக்காணி, முத்துசாமி, குமரேசன், மற்றும் மோகன், ஆகியோருடன் மொடக்குறிச்சியை சேர்ந்த பிரகாஷ் என்கிற படையப்பா (வயது 26 ) என்பவரின் வாடகை மாருதி வேனில் அதிகாலை பழனி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
வீடு திரும்பிய போது, மதியம் சிவகிரி அருகே பாரப்பாளையம் பஸ் நிறுத்தத்தை கடந்து சென்றபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் மாருதி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் தேன்மொழி, மஞ்சு, அருக்காணி,தெய்வானை மற்றும் மாருதி வேன் டிரைவர் பிரகாஷ் என்கிற படையப்பா. இறந்தவர்களின் உடல் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
குமரேசன், முத்துச்சாமி, மோகன் ஆகியோர் படுகாயமடைந்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.