118 ஆண்டுக்கு பின் காஞ்சி பாலாற்றில் பெரு வெள்ளம்
1 min read
118 years after the great flood in the Kanchi Lake
20.11.2021
118 ஆண்டுக்கு பின் காஞ்சிபுரம் பாலாற்றில் பெரு வெள்ளம் ஓடுகிறது. 1903ம் ஆண்டுக்கு பின் தற்போது, வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் செல்வதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாலாற்றில் வெள்ளம்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்லும் பாலாற்றில், ஒரு மாதமாகவே வெள்ள நீர் செல்கிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கியது முதல், அதிக அளவில் தண்ணீர் செல்வதால், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து, அதிகளவில் தண்ணீர் வருவதால், காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் பகுதியில், பாலாற்றுடன் செய்யாறு மற்றும் வேகவதி ஆறும் கலப்பதால், அப்பகுதியில் இன்னும் அதிகளவு தண்ணீர் செல்கிறது. மூன்று ஆறுகள் கலந்து செல்லும் போது, திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள எடையாத்துாரில் கிளியாறும் பாலாற்றுடன் கலப்பதால், வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் கடலில் கலக்கிறது. கிட்டத்தட்ட, ஒரு நாளைக்கு, 5 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கிறது.
இது போன்று பல டி.எம்.சி., கன அடி நீர் கடலில் கலப்பதற்கு, பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டியிருந்தால், மழை நீர் வீணாக கடலில் கலப்பதை ஓரளவு தடுக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, இரு கரை தொட்டு தண்ணீர் செல்வதால், இரு கரையோரம் உள்ள மக்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 1903ல் வாலாஜாபேட்டை அணைக்கட்டிலிருந்து ஒரு லட்சம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. அதற்குபின் இந்த ஆண்டு தான், 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் பாலாற்றில் செல்கிறது. கடந்த 1903ல் அதிகபட்சமாக வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் சென்றது. அதைவிட சற்று குறைவாக, வினாடிக்கு 1.04 லட்சம் கன அடி நீர் தற்போது செல்கிறது. பாலாறு, செய்யாறு பிற கால்வாய்களில் இருந்து வரும் தண்ணீர் என, அனைத்து தண்ணீரும் சேர்ந்து திருமுக்கூடல் பகுதியில் செல்லும் நிலையில், வினாடிக்கு 1.26 லட்சம் கன அடி நீர் செல்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.