பாளை சிறைக் காவலர்கள் 5 பேரின் இடமாறுதல் ரத்து; ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Cancel the transfer of 5 prison guards; Order of the High Court
20/1/2021
பாளையங்கோட்டை மத்திய சிறைக் காவலர்கள் 5 பேர் இடமாறுதல் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.
சிறை காவலர்கள்
பாளையங்கோட்டை சிறைக் காவலர்கள் நரசிங்கராஜா உள்ளிட்ட 5 பேர், தங்களின் நிர்வாக ரீதியான இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.
அரசுத் தரப்பில், ”பாளையங்கோட்டை மத்திய சிறையில் எப்போதும் சாதிரீதியான பிரச்சினை உள்ளது. இரு தரப்பினரிடையே பிரச்சினைக்குரிய வகையிலான செய்திகளை மனுதாரர்கள் பரப்பியுள்ளனர். சிறைக்குள் பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழலைக் கருதி நிர்வாக ரீதியான காரணங்களுக்காக மனுதாரர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர்” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொதுவாக ஒருவர் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் முறையாக விசாரணை நடந்த பிறகே இடமாறுதல் செய்வது வழக்கம். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த பிறகே ஒழுங்கு நடவடிக்கைக்கான குற்றச்சாட்டு குறிப்பானை வழங்கப்பட்டுள்ளது. இடமாறுதலும் நிர்வாகக் காரணத்திற்காகவே வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகக் காரணங்களுக்காக எனும்போது பல்வேறு காரணங்களை எடுத்துக்கொள்ள முடியும். நிர்வாகக் காரணங்களுக்கான இடமாறுதல் என்பது குறித்துத் தெளிவுபடுத்தி, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும். இந்த மனுக்கள் ஏற்கப்பட்டு, மனுதாரர்களை இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.