July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு

1 min read

Central team inspects rain-affected areas

22.11.2021

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தது.

மழை சேதம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ஏராளமான பயிர்கள் அழுகிவிட்டது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வயல்வெளிகளில் மணல் குவிந்து விட்டது.

சென்னை மற்றும் புறநகரில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அதிக பொருட்சேதத்தை ஏற்படுத்தி விட்டது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார்.

ரூ.2,629 கோடி

அவரது உத்தரவின் பேரில் அமைச்சர்கள் குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து பயிர் சேதம் குறித்த அறிக்கையை அளித்தனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்.பி. வழங்கினார். அதில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல் கட்டமாக ரூ.550 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

மத்திய குழு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களை பார்வையிட 7 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த மத்திய குழுவினர் நேற்று மதியம் 1 மணியளவில் சென்னை வந்தனர். பிற்பகல் 3.30 மணிக்கு தலைமைச் செயலகம் சென்றனர். அங்கு தலைமைச் செயலாளர் இறையன்பு, பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விவரங்களை விரிவாக எடுத்து கூறினார்கள்.

அதன் பிறகு சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு (ரிப்பன் மாளிகை) மத்திய குழுவினர் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள சேத பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை மத்திய குழுவினருக்கு விளக்கி கூறினார். இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் இரு பிரிவாக பிரிந்து சென்று இன்றும் நாளையும் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிடுகின்றனர்.

உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான முதல் குழுவில் வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அதிகாரி ராணஞ்சாய்சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என். வரபிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இன்று

இந்த குழுவினர் இன்று காலை சென்னையில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். வடசென்னையில் வீரா செட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புரசைவாக்கம் அழகப்பா ரோடு, கொளத்தூர் சிவ இளங்கோ சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது மேலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்று விளக்கி கூறினார்கள். சென்னையில் வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வுகளை முடித்த மத்திய குழுவினர் புறநகர் பகுதியான தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.