வாகன சோதனையில் ஈடுபட்ட ஆய்வாளர் விபத்தில் சாவு
1 min read
Investigator involved in vehicle test dies in crash
22.11.2021
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர், நா.கனகராஜின் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த கனகராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் ஆய்வாளர்
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ் (வயது57). இவர் இன்று காலை 9.30 மணியளவில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த முயன்றபோது வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கனகராஜ், சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காலை 10.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில் உயிரிழந்த வாகன ஆய்வாளர் கனகராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரியும் நா.கனகராஜ் இன்று (22-11-2021) காலை கரூர்-திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகனத் தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நா.கனகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர், பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த நா.கனகராஜின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.