நடிகை கங்கனாவின் காரை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
1 min read
Farmers stop actress Kangana’s car
3.12.2021
பஞ்சாபில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சென்ற காரை மறித்த விவசாயிகள், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கங்கனா ரணாவத்
மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்ற மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என, பாலிவுட் நடிகை கங்கனா தொடர்ந்து விமர்சித்தார்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் பகுதியில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் கங்கனா ரணாவத் இன்று காரில் சென்றார். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காரை மறித்தனர்.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் கங்கனா, ”குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை தான் விமர்சித்தேன், விவசாயிகளை எதுவும் கூறவில்லை,” என்றார். இதையடுத்து அவரது கார் செல்ல விவசாயிகள் வழிவிட்டனர்.
இது பற்றி கங்கனா கூறுகையில், ”பஞ்சாபில் ஒரு கூட்டம் என் காரை மறித்து, என்னை தகாத வார்த்தைகளால் திட்டியது. பாதுகாப்பு அதிகாரிகள் இல்லையெனறால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை,” என்றார்.