பாலியல் புகாரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
1 min read
Public school teacher arrested under Pokcho Act for sexual harassment
7.12.2021
நாமக்கல்லில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பெற்றோர் சிலர் நேற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் மகள்கள், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அதில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவரால், தகாத தொடுதல் நடந்து உள்ளது.
அந்த மாணவி தனது வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டசில், கடந்த 4-ந் தேதி பிறந்தநாள் என்றும், இறப்பு தேதி (4.12.2021) எனக் குறிப்பிட்டு நான் இறக்கப்போகிறேன் என்பதை மறைமுகமாக பதிவு செய்து உள்ளார். அதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் பதில் இல்லாததால், சக மாணவிகளின் பெற்றோர், சம்பந்தப்பட்ட மாணவி வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். உடனடியாக அவரை தடுத்து சமாதானம் செய்ததுடன் காரணம் குறித்து கேட்டபோது, ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்வது குறித்து தெரிவித்துள்ளார்.
மிரட்டல்
மேலும் தகாத முறையில் பார்ப்பது, உரசுவது, தொடுவது, விலகி சென்றால் பக்கத்தில் வந்து நில் என பாலியல் புகார் கூறி உள்ளார். இதுபோல் தவறாக நடந்து கொள்வது குறித்து யாரிடமாவது கூறினால், மதிப்பெண்களை குறைப்பேன் என மிரட்டுகிறார். இதுபோன்ற சூழலில் மனம் உடைந்த மாணவி தற்கொலை முயற்சி செய்து உள்ளார். அந்த மாணவியின் நிலைக்கு காரணமான ஆசிரியர் மீது துறை ரீதியாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
கைது
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மதிவாணனை இன்று காலை நாமக்கல் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் புகாரில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.