குற்றாலம் அருவி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
1 min read
Intensification of rehabilitation works in Courtallam Falls areas
8.12.2021
குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
குற்றாலம் அருவி
கொரோனா பரவலை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பு கருதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற 20-ந்தேதி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக கலெக்டர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார்.
20-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடித்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சீரமைப்பு பணி
அரசின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
தற்போது சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வது வழக்கம். குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்ததினால் அவர்களும் அவதிப்பட்டு வந்தனர். சுமார் ஆயிரம் சில்லறை கடை வியாபாரிகள் இந்த சீசனை நம்பி உள்ளனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதற்கு அவர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்னர்.
இதற்கிடையே குற்றாலம் அருவி பகுதிகளில் தற்போது சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மழையால் சேதம் அடைந்த டைல்ஸ் தரைகள், உடை மாற்றும் அறை, ஸ்டீல் தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் தூய்மைப் பணியாளர்களும் அங்கு தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றாலத் தில் உள்ள பூங்காக்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது.