பிபின் ராவத் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
1 min read
MK Stalin’s tribute to Pipin Rawat’s body
9.12.2021
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி பிபின்ராவாத் உள்பட 13 பேர் உடல்கள் இன்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. பிபின் ராவத் உடலுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
ஹெலிகாப்டர் விபத்து
இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ரவாத் உள்பட 14 பேர் நேற்று சூலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டலில் சென்று கொண்டிருந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் இறந்த பிபின் ராவத் உள்பட 13 பேர் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.
அதன்பின் இன்று காலை 10.40 மணியளவில் மருத்துவமனையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் உடல்கள் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து வெலிங்டன் மைதானத்தில் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி
பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்த படி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, காவல்துறை உயர் அதிகாரிகள், தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில்,வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்ச்சி முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.
வழியில் உடல்களளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு போலீஸ்காரர் மீது லேசாக மோதியது. இதில் லேசான காயம் அடைந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
டெல்லி சென்றது
இன்று மாலை முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் சூலூர் சென்றடைந்தது. அதன்பின் ராணுவ விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவர்களது உடல்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன்பின் பிபின் ரவாத் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு இனறு நடைபெற உள்ளது. அவரது உடல் தகனம் செய்ப்படும்.
அரைக் கம்பத்தில் தேசிய கொடி
இதற்கிடையே பிபின் ராவத உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.