ராணுவ வீரர்கள் உடல்களை கொண்டு செல்லும் வழியில் அடுத்தடுத்து விபத்து
1 min read
Subsequent accident on the way to carry the bodies of soldiers
9.12.2021
ராணுவ வீரர்கள் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லும் வழியில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது.
விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
வெலிங்டன் ராணுவ சதுக்கத்தில் வைக்கப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்ச்சி முடிந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.இதில் வழியெங்கும் பொதுமக்கள் சாலைகளின் இரு ஓரமும் நின்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தினர்.
போலீஸ் வாகனம்
இந்த நிலையில் உடல்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பாதுகாப்பாக சென்ற போலீஸ் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. வாகனத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை .இருப்பினும் அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரரின் உடல் மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு மாற்றப்பட்டு விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.