ஓராண்டுக்கு மேல் நீடித்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது
1 min read
The farmers’ struggle, which lasted for more than a year, came to an end
9.12.2021
விவசாய சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கான மசோதா பார்லியின் இரு அவைகளிலும் நிறைவேறியது. ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவற்றை ஏற்பது குறித்து மத்திய அரசு சமீபத்தில் தன் திட்டத்தை அனுப்பி வைத்தது. அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் வலியுறுத்தின. அதையடுத்து புதிய திட்டத்தை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சக்யுக்த கிஷான் மோர்ச்சா பிரதிநிதிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதன்படி, இன்று போராட்டத்தை கைவிடுவதாக சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது.
மீண்டும் போராட்டம்
இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் விவசாய சங்கத் தலைவர்களுள் ஒருவரான குர்னாம் சிங் சாருனி கூறுகையில், ‘போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம். ஜனவரி 15-ம் தேதி மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துவோம். அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவோம்,’ என்றார். மேலும், நாளை மறுநாள் (டிச.,11) போராட்டக் களத்தில் இருந்து திரும்புவதாகவும் அறிவித்துள்ளனர். போராட்டம் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இப்போதிருந்தே விவசாயிகள் கூடாரத்தை காலி செய்ய துவங்கியுள்ளனர்.