ஹெலிகாப்டர் விபத்தில்உயிரிழந்த பிரிகேடியர் லிட்டர் மகள் உருக்கம்
1 min read
Melting daughter of Brigadier Litter who died in a helicopter crash
10.12.2021
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லிட்டர் (வயது 52) உடலுக்கு அவரது மனைவி கீத்திகா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவரது மகள் தனது தந்தைதான் ஹீரோ, நண்பர் என்று உருக்கமாக கூறினார்.
10.12.2021
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். இதில் இறந்தவர்களில் ஒருவர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர். “எல்.எஸ்.லிட்டர்’ என்றழைக்கப்படும் இவர் அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் மறைந்த பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். டெல்லியிலிருக்கும் தேசிய பாதுகாப்புப் படைக் கல்லூரியில் ராணுவப் பயிற்சி பெற்ற இவர், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் பொறுப்பு வகித்தார்.
பின்னர், கஜகஸ்தான் நாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ராணுவ விவகாரங்கள் குறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவருக்கு கீதிகா என்ற மனைவியும், ஆஷ்னா என்ற 16 வயது மகளும் உள்ளனர்.
மகள்
பிரிகேடியர் எல்.எஸ். லிட்டர்-ன் மகள் ஆஷ்னா தனது தந்தை ஒரு வீரன், எனது நல்ல நண்பன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
லிட்டரின் உடல் அடங்கிய சவப்பெட்டியைப் பார்த்து இருவரும் கதறி அழுதனர். ஆனால் இருவருமே மன உறுதியுடன் காணப்பட்டனர். தனது கணவரின் மறைவு குறித்து கீதிகா கூறும் போது அவர் ஒரு வீரர். அனைவரும் புன்னகையுடன் அவரை வழியனுப்பி வைப்போம். நான் வீரனின் மனைவி. இது எனக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூறியிருந்தார்.
ஹீரோ
அதேபோல அவரது மகள் ஆஷ்னாவும் தனது தந்தையின் மறைவால் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தாலும் கூட நிலை குலையாமல், மன உறுதியுடன் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “எனது தந்தை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் ஒரு வீரர். அவர் ஒரு ஹீரோ. அவர் சீக்கிரம் போய் விட்டார். எங்களுக்கு நல்லது நடக்க அவர் ஆசி புரிவார். எனக்கு நல்ல ஊக்க சக்தியாக திகழ்ந்தவர் எனது தந்தை.
எனக்கு 17 வயதாகப் போகிறது. இத்தனை வருடங்கள் என்னுடன் அவர் இருந்துள்ளார். அவர் என்னிடம் விட்டுச் சென்ற மகிழ்ச்சியான நினைவுகளுடன் வாழ்வேன். அவரது மரணம் தேசிய இழப்பு” என்று கூறினார். தனது பேட்டியின்போது அழுகையை வெளிப்படுத்தாமல், மிகுந்த மன உறுதியோடு அவர் பேசியது அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.
விரைவிலேயே எல்.எஸ்.லிட்டர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெறவிருந்தார். ஆனால், சீக்கிரமே ஓய்வு பெற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம் லிட்டர். ஜெனரல் பிபின் ராவத்தான் அவரை, கொஞ்சம் பொறுங்கள். நாம் இருவரும் சேர்ந்தே ஓய்வு பெறலாம் என்று கூறி வந்தாராம். ஆனால் இருவரும் ஒன்றாக இன்று மரணத்தைச் சந்தித்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.