ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டர், டிரைவர் கைது
1 min read
Conductor and driver arrested for sexually harassing a college student on a moving bus
11.12.2021
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
திருமணமான மாணவி
விழுப்புரம் மாவட்டம் கோனூர் கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய மாணவி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவருடைய கணவர் கூலி வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் அவர் தனது படிப்பை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுமுறைக்காக மாணவி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனது பெற்றோர் வீடான கெடிலம் சென்றார். பின்னர் அங்கிருந்து விழுப்புரம் வந்த அவர், இரவு கொத்தமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் கோனூருக்கு புறப்பட்டார். பஸ்சின் கடைசி இருக்கையில் மாணவி அமர்ந்து பயணம் செய்தார்.
பாலியல் தொல்லை
இந்த பஸ்சை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 3-ல் பணிபுரியும் இருவேல்பட்டை சேர்ந்த அன்புச்செல்வன் (வயது 45) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக அதே பணிமனையில் பணியாற்றி வரும் கடலூர் மாவட்டம் குடுமியான்குப்பத்தை சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர் இருந்தார்.
இந்த பஸ் விழுப்புரத்தில் இருந்து கொத்தமங்கலம் செல்லும்போது வழியில் பஸ்சில் இருந்த பயணிகள் ஒவ்வொரு ஊரில் இறங்கினர். கோனூர் அருகே சென்றபோது பஸ்சில் அந்த மாணவியை தவிர பயணிகள் வேறு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. கோனூர் வந்ததும் மாணவி பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்றார். அதற்கு பஸ் கண்டக்டர் சிலம்பரசன், மாணவியிடம் நீங்கள் இறங்க வேண்டிய இடம் இன்னும் வரவில்லை என்று கூறியபடி பஸ்சை நிறுத்தாமல் இயக்குமாறு டிரைவரிடம் கூறியதாக தெரிகிறது. அதன்படி அன்புச்செல்வனும் கோனூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ஓடும் பஸ்சிலேயே அந்த மாணவிக்கு கண்டக்டர் சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். உடனே அந்த மாணவி, பஸ்சை நிறுத்தும்படி டிரைவரிடம் சத்தம்போட்டு கூறியுள்ளார். ஆனால் டிரைவர் அன்புச்செல்வன், அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் பஸ்சை நிறுத்தாமல் இயக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவி, செல்போன் மூலம் தனது கணவரை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறி கதறி அழுததோடு பஸ் செல்லும் இடத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் தர்மஅடி
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் கணவர் மற்றும் கொத்தமங்கலம், கோனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு சென்று அந்த பஸ்சை வழிமறித்து அதில் இருந்த மாணவியை மீட்டனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள், பஸ் கண்டக்டர் சிலம்பரசன், டிரைவர் அன்புச்செல்வன் ஆகிய இருவருக்கும் தர்மஅடி கொடுத்தனர். தொடர்ந்து, இதுபற்றி அவர்கள், காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைது
இதையடுத்து சிலம்பரசன் மீது பலாத்காரம் செய்யும் நோக்கத்திற்காக கடத்திச்செல்லுதல், தப்பிக்க விடாமல் தடுத்தல், பாலியல் தொந்தரவு கொடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழும், அன்புச்செல்வன் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் சட்டப்பிரிவின் கீழும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க விழுப்புரம் கலெக்டர் டி.மோகன் அறிவுறுத்தினார். இதையடுத்து கைதான இருவரையும் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் செல்வன் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தலைகுனிவு
இந்த சம்பவம் போக்குவரத்து கழகத்திற்கு தலைகுனிவையும், களங்கத்தையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு ஆகும் என்று போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகளை வரும் காலங்களில் போக்குவரத்து கழக பணியாளர்கள் அனுமதிக்கக்கூடாது, மீறி ஈடுபடும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.