உத்தரபிரதேச ரெயில்வே நிலையத்தில் நள்ளிரவில் பிரதமர் மோடி ஆய்வு
1 min read
Prime Minister Modi inspects Uttar Pradesh railway station at midnight
14/12/2021
உத்தர பிரதேசத்தில் பனாரஸ் ரெயில்வே நிலையத்தில் நள்ளிரவில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
வாரணாசியில் மோடி
உத்தர பிரதேசத்தில் தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசி நகருக்கு பிரதமர் மோடி நேற்று (திங்கட்கிழமை) வருகை தந்துள்ளார். அவர் வாரணாசியில் ரூ.339 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைத்து பேசினார்.
அவர் கூறும்போது, “காசி விஸ்வநாதர் கோவிலின் இருண்ட பக்கம் தற்போது முடிவடைந்துள்ளது. 3 ஆயிரம் சதுர அடியில் இருந்த காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், தற்போது 5 லட்சம் சதுர அடியாக மாறியுள்ளது. இப்போது, 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கும் அதன் வளாகத்திற்கும் வரலாம்” என்று கூறினார்.
அதன்பின், வாரணாசியில் பா.ஜ.க. முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் ஆகியோருடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டம் நள்ளிரவு வரை 6 மணிநேரம் நடந்துள்ளது.
நள்ளிரவில் ஆய்வு
இதனை தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் உடன் செல்ல, வாரணாசியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி நள்ளிரவில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுபற்றி இன்று அதிகாலை 12.52 மணியளவில் தனது டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “காசியில் முக்கிய வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். இந்த புனித நகருக்கான சாத்தியப்பட்ட சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது நம்முடைய பெரு முயற்சி” என தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியின் நகர வருகையை அறிந்த உள்ளூர்வாசிகள் அந்த பகுதியில் திரண்டிருந்தனர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை காண்பதற்காக கூடியிருந்த மக்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்ததுடன் சிலருடன் உரையாடி விட்டு சென்றார்.
ரெயில்நிலையம்
இதன்பின்னர் அவர் பனாரஸ் ரெயில்வே நிலையத்திற்கும் அதிகாலை வேளையில் சென்றார். இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ரெயில் பயணங்களை இணைப்பதுடன், தூய்மை, நவீன மற்றும் பயணிகளுக்கான நண்பனாக ரெயில்வே நிலையங்கள் செயல்படுவது உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்து உள்ளார்.