அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி ஜாக்குலின் பெர்னாண்டசிடம் சுகேஷ் சந்திரசேகர் மோசடி
1 min read
Sukesh Chandrasekhar cheats on Jacqueline Fernandez using Gill Amitsha phone number
14/12/2021
அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி ஜாக்குலின் பெர்னாண்டசிடம் சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்த தகவல் அமலாக்க துறை குற்றப்பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது.
பணமோசடி
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.
அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
சிறையில் இருந்தபடி மோசடி
இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக அவரது காதலி லீனா மரியாவிடமும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.
அமித்ஷா போன் நம்பர்
இந்த நிலையில் நடிகை ஜாக்குலினிடம் நட்பை ஏற்படுத்துவதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அலுவலக போன் நம்பரை பயன்படுத்தி சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது
இது தொடர்பாக அமலாக்கத்துறையின் குற்றப் பத்திரிகையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுகேஷ் சந்திரசேகர் முதலில் டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021-ல் ஜாக்குலின் பெர்னாண்டசை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றார். ஆனால் அவர் யார் தெரியாததால் ஜாக்குலின் அந்த அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.
பின்னர் அவரது ஒப்பனை கலைஞர் ஷானுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அரசாங்கத்தில் மிக முக்கியமான நபர் என்பதால் சேகர் என்ற சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த அழைப்பு அமித்ஷாவின் அலுவலகத்தில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அது ஒரு மோசடியான ஏமாற்று அழைப்பு என்று கண்டறியப்பட்டது.
சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுடன் நட்பு ஏற்பட அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளார். அதன்பிறகே அவரது ஒப்பனை கலைஞர் சுகேஷ் சந்திரசேகரின் மொபைல் நம்பரை ஜாக்குலினுடன் பகிர்ந்துள்ளார்.
அதன்பிறகுதான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் தனது பெயரை சேகர் ரத்னா வேலா என்று அறிமுகப்படுத்தி இருந்தார்.
கோடி கோடியாக..
நடிகை ஜாக்குலின் குடும்பத்தினருக்கு சுகேஷ் சந்திரசேகர் கோடி கோடியாக பரிசளித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் அவரது சகோதரிக்கு கடனாக பணம் அளித்துள்ளார். மேலும் சொகுசு கார்களையும் கொடுத்துள்ளார்.
மேலும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் சுகேஷ் சந்திரசேகர் கூறி இருந்தார்.
இந்த மோசடிகளுக்கு எல்லாம் சுகேஷ் மூளையாக செயல்பட்டு இருக்கிறார். அவர் தனது 17-வது வயதில் இருந்தே குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளார். அவர் மீது பல எப்.ஐ.ஆர்.கள் உள்ளன.
இவ்வாறு அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.