ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய பெண் நியமனம்
1 min read
Indian woman appointed CEO of luxury goods company
15.12.2021
பிரான்சின் ஷனேல் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய பெண் லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லீனா நாயர்
பிரான்சின் பேஷன் ஆடை மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் ஷனேல் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகியாக இந்தியாவின் லீனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் பெப்ஸிகோ நிறுவனத்தை வழி நடத்தும் உலகளாவிய தலைமை நிர்வாகி இந்திரா நூயீ-க்கு பிறகு மிக பெரிய நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பெண்மணி என்ற பெயரை லீனா நாயர் பெற்றுள்ளார்.
சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்ட ஷனேல் நிறுவனம் லூயீ வியூடான் ஹமீஸ், கூச்சி , லோரியால் உள்ளிட்ட நிறுவனங்களின் போட்டி நிறுவனமாக இருந்து வருகிறது.
தங்கப்பதக்கம்
இந்த நிலையில், யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரியாக இருந்த லீனா நாயர் தற்போது ஷனேல் நிறுவனத்தை வழிநடத்த உள்ளார். மாராட்டியத்தின் கோலாபூரில் பிறந்த லீனா நாயர்,அங்குள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் பயின்றார். ஜம்ஷெட்பூர் எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்லூரியில் மனிதவள படிப்புக்காக தங்க பதக்கம் பெற்றவர்.
லீனா நாயர் 1992-ல் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்-ல் சேர்ந்து 30 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். 2000-ல், அவர் ஹிந்துஸ்தான் லீவர் இந்தியாவின் மனித வள மேலாளராக உயர்த்தப்பட்டார். 2004 ல், நாயர் ‘ஹோம் அண்ட் பெர்சனல் கேர் இந்தியா’வின் பொது மேலாளராக ஆனார், மேலும் 2006-ல் தலைமை பொது மேலாளராக உயர்ந்தார். அதன்பின், 2008-ல் யூனிலீவர் தெற்காசியா தலைமைக் குழுவில் முதல் பெண்ணாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்தில், பார்ச்சூன் இந்தியாவின் 2021-ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அவர் இடம்பெற்றார்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் அறிவிக்கப்பட்டது குறித்து, யூனிலீவர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோப், கடந்த மூன்று தசாப்தங்களாக நிறுவனத்திற்கு அளித்த சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.