July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் பள்ளிக்கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் பலி- தாளாளர் கைது

1 min read

3 students killed in school building collapse in Nellai

17.12.2021
நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கூடம்

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு சென்று பயின்றனர்.

காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்ல தொடங்கினர். கழிவறையின் ஒரு பகுதிக்கு வெளியே 6 மாணவர்கள் காத்து நின்றனர்.

சுவர் இடிந்தது

அப்போது திடீரென கழிவறையின் தடுப்பு சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது. இதைப் பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார், பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் மற்றும் நிலைய வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

3 பேர் பலி

இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் (வயது 13) மற்றும் 9-ம் வகுப்பு மாணவனான டவுனை சேர்ந்த அன்பழகன் (14) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் சஞ்சய், இசக்கி பிரகாஷ், அபுபக்கர் உள்ளிட்ட 4 பேரை பலத்த காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஒரு மாணவர் உயிரிழந்தார். மற்ற 3 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தாமரை கண்ணன், துணை கமி‌ஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார், பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் மற்றும் நிலைய வீரர்கள் பள்ளிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சுவர் இடிந்து சக நண்பர்கள் பலியானதால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். அவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது. இதனால் மற்ற மாணவர்களை போலீசார் பத்திரமாக அங்கிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களிடம் கேட்டபோது, என்னுடன் கழிவறைக்கு வந்த நண்பன் சுவர் இடிந்து விழுந்து பலியானான் என்று கூறி அழுதவாறு பள்ளியில் இருந்து வெளியேறினான்.

பள்ளி சென்ற மாணவர்கள் சுவர் இடிந்து பலியான சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முற்றுகை

இந்தநிலையில் நெல்லை தனியார் பள்ளியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.

விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கைது

இந்நிலையில், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாஃப்டர் பள்லியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.