மராட்டிய மாநிலத்தில் டிரோன்கள் மூலம் கிராமங்களுக்கு தடுப்பூசி விநியோகம்
1 min read
Vaccine distribution to villages by drones in the Maratha state
18.12.2021
மராட்டிய மாநிலத்தில் ஆளில்லாத சிறிய வகை விமானமான ட்ரோன் மூலம் கிராமங்களுக்குள் சென்று கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
டிரோன்கள்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பணிக்கு டிரோன்களை பயன்படுத்தும் சோதனை நடைபெற்றது. ஜவஹர் பகுதியில் இருந்து ஜாப் என்ற கிராமத்திற்கு தடுப்பூசிகளை கொண்டு செல்லும் முதல் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் மணிக் குர்ஷல் கூறியதாவது:-
9 நிமிடங்களில்
பால்கர் மாவட்டத்தில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத சாலைகளை கொண்ட கிராமங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றான ஜாப் கிராமத்திற்கு ஜவஹர் என்ற இடத்தில் இருந்து பறக்கும் டிரோன்கள் மூலம், சோதனை முயற்சியாக 300 தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன. 20 கி.மீ தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு வாகனங்கள் மூலம் சென்றால் 40 நிமிடங்கள் ஆகும். ஆனால் டிரோன்களின் மூலம் வெறும் 9 நிமிடங்களில் தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு உள்ளூர் சுகாதார நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அம்மாவட்ட மருத்துவ அதிகாரியான மருத்துவர் தயானந்த் சூர்யவான்ஷி பேசிய போது, ‘இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாத ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு செல்ல முடியும். மக்களுக்கு தடுப்பூசி மீது இருக்கும் தவறான எண்ணத்தையும் மாற்ற முடியும்’ என தெரிவித்தார்.